பைக் இன்சூரன்ஸில் ஐடிவி என்றால் என்ன?
இன்சூரன்ஸ் தொடர்பான விஷயங்களைப் புரிந்துகொள்வதில் பொதுவாக நமக்குப் பல சிரமங்கள் இருக்கின்றன. அந்தச் சிரமங்களைக் களையும் பொருட்டு மிக எளிய வார்த்தைகளால் அதைப் பற்றி உங்களுக்கு விளக்கமாக நாங்கள் சொல்கிறோம். அவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்சூரன்ஸ் தொடர்பாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் வார்த்தைகளில் ஒன்று ஐடிவி (IDV- Insured Declared Value). அதாவது இன்சூர்டு டெக்லேர்டு வேல்யூ. பைக் இன்சூரன்ஸில் ஐடிவி எப்படிப் பயன்படுத்தப்படுகிறது? உங்கள் பைக் இன்சூரன்ஸில் இந்த ஐடிவி எவ்வளவு முக்கியமானது? போன்று பைக் இன்சூரன்ஸில் ஐடிவி பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளுக்குகான பதில்களை உங்களுக்கு எளிதில் புரியும்படி அளித்து உதவுகிறோம்.
நீங்கள் பைக் வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. உங்கள் விருப்பமான பைக்கின் இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் காலம் வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். நாம் உடனே ஓடிச் சென்று பைக்கின் இன்சூரன்ஸூக்கான பிரீமியத் தொகையைச் செலுத்திப் புதுப்பித்துக்கொள்வோம். ஆனால், உண்மையில் இன்சூரன்ஸின் படி உங்கள் வாகனத்தின் மதிப்பு என்ன என்று தெரியுமா? உங்கள் வாகனம் திருடப்பட்டாலோ, சேதமடைந்தாலோ, பழுதுபார்க்க முடியாதபடி பிரச்சினை உண்டானாலோ உங்களுக்கு எவ்வளவு தொகை திரும்பக் கிடைக்கும் எனத் தெரியுமா? அந்த தொகை மதிப்பு தான் ஐடிவி எனப்படுகிறது. அதாவது இன்சூர்டு டெக்லேர்டு வேல்யூ. இது உங்கள் வாகனத்தின் சந்தை மதிப்பாக இருக்கும்.
குறிப்பு: ஐடிவி, முழுமையான இருசக்கர வாகன இன்சூரன்ஸில் மட்டுமே செல்லுபடியாகும்.
பைக் இன்சூரன்ஸில் ஐடிவி என்றால் என்ன?
இன்சூர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது உங்கள் பைக்கின் தேய்மானத்தைக் கணக்கிட்ட பிறகு சந்தை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் மதிப்பு. ஓர் எளிய உதாரணத்துடன் இதை விளக்கமாகப் பார்க்கலாம். நீங்கள் ரூ. 1 லட்சத்திற்கு ஒரு புத்தம் புதிய பைக்கை (வாகனப் பதிவுக் கட்டணம், சாலை வரி, இன்சூரன்ஸ், உதிரி பாகங்கள் உள்ளிட்டவை தவிர்த்து) வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். வாங்கிய புதிதில் உங்கள் பைக் இன்சூரன்ஸ் ஐடிவி மதிப்பும் ரூ. 1 லட்சமாக இருக்கும். உங்கள் வாகனம் பழையதாக ஆக ஆக உங்கள் வாகனத்தின் சந்தை மதிப்பு குறைவதுபோல் உங்கள் வாகன இன்சூரன்ஸ் ஐடிவி மதிப்பும் குறையும். உதாரணமாக, இரு வருடங்களில் உங்கள் வாகனத்தின் மதிப்பு ரூ.65 ஆயிரமாகக் குறைவதாகக் கொண்டால், அப்போது உங்கள் வாகன இன்சூரன்ஸ் ஐடிவி மதிப்பும் ரூ.65 ஆயிரமாக இருக்கும்.
பெரும்பாலானவர்கள் இந்த விஷயத்தில் குழப்பமடைவார்கள். வாகன இன்சூரன்ஸ் ஐடிவி மதிப்பு என்பது வாகன உற்பத்தியாளர்களின் விவரங்கள் அடிப்படையில் (manufacturer’s specifications) அல்லது வாகன உற்பத்தியாளர்களின் மதிப்பீட்டு அடிப்படையில் (the amount the manufacturer value) கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் வாகனத்தை வெளியில் ரூ.85 ஆயிரத்துக்கும் விற்க முடியுமாக இருக்கும். ஆனால், உங்கள் வாகனத்தின் ஐடிவி மதிப்பு என்பது ரூ. 65 ஆயிரமாகத் தான் இருக்கும்.
உங்கள் பைக்கின் தேய்மான விகிதங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
பைக்கின் வயது |
தேய்மானம் சதவீதத்தில் |
6 மாதம் அதற்கும் கீழ் |
5% |
6 மாதம் - 1 வருடத்துக்கும் இடையில் |
15% |
1 – 2 வருடங்கள் |
20% |
2 – 3 வருடங்கள் |
30% |
3 – 4 வருடங்கள் |
40% |
4 – 5 வருடங்கள் |
50% |
5+ வருடங்கள் |
பாலிசிதாரரும் இன்சூரன்ஸ் நிறுவனமும் பரஸ்பரமாகத் தீர்மானிப்பது ஆகும் |
பைக்கிற்கான ஐடிவி கால்குலேட்டர்
உங்கள் இருசக்கர வாகனத்துக்கான ஐடிவி கணக்கீடு என்பது மிக எளிமையானது. உங்கள் இருசக்கர வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை/ அதன் தற்போதைய சந்தை மதிப்பைத் தேய்மானத்துடன் கழித்துக் கணக்கிடப்படுவது உங்கள் இருசக்கர வாகனத்துக்கான ஐடிவி மதிப்பு ஆகும். வாகனத்தின் பதிவுக் கட்டணம், சாலை வரி, இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவை ஐடிவி மதிப்பில் சேர்க்கப்படாது. இருசக்கர வாகனத்தில் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் வேறு ஏதாவது பாகங்கள் பொருத்தப்பட்டிருந்தால், அந்தக் குறிப்பிட்ட பாகத்தின் ஐடிவி தனியாகக் கணக்கிடப்படும்.
இருசக்கர வாகனத்துக்கான ஐடிவி கணக்கிட கருத்தில் கொள்ளப்படும் காரணிகள் எவை?
இருசக்கர வாகனத்துக்கான ஐடிவி, வாகனத்தின் சந்தை மதிப்பைக் குறிப்பதால், ஐடிவியை கணக்கிட பின்வரும் காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
- உங்கள் இருசக்கர வாகனத்தின் தயாரிப்பு மற்றும் மாடல்
- உங்கள் இருசக்கர வாகனத்தின் பதிவுத் தேதி
- உங்கள் இருசக்கர வாகனத்தைப் பதிவு செய்த நகரம்
- உங்கள் இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தும் எரிபொருள் வகை
- உங்கள் இருசக்கர வாகனத்தின் வயது
- உங்கள் இருசக்கர வாகனத்தின் பாலிசி வகை
- உங்கள் இருசக்கர வாகனத்தின் பாலிசி காலம்
வருடங்களுக்கு மேல் வயதான இருசக்கர வாகனங்களுக்கு ஐடிவி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
இருசக்கர வாகன இன்சூரன்ஸில் உள்ள ஐடிவி, உங்கள் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களின் விற்பனை விலை மற்றும் வாகனத்தின் தேய்மானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பைக் வாங்கிய 5 ஆண்டுகளில், தேய்மான சதவிகிதம் கணக்கிடும் போது புதிய பைக்கிற்கு 5% என்றும், 4 முதல் 5 ஆண்டுகள் ஆன பைக்கிற்கு 50% ஆகவும் கணக்கிடப்படுகிறது. 5 வருடங்களுக்கு மேல் என்றால், அதன் ஐடிவி மதிப்பு இன்சூரரால் கணக்கிடப்படும். அதாவது, இருசக்கர வாகனம் மற்றும் அதன் உதிரிப்பாகங்களின் அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனம் முடிவுசெய்யும்.
சரிபார்க்கவும்: உங்கள் இருசக்கர வாகனத்திற்கான பிரீமியம் மற்றும் ஐடிவி மதிப்பைப் பெற பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்.
ஐடிவியும் பிரீமியமும்
உங்கள் இருசக்கர வாகனத்திற்குச் சரியான ஐடிவியைப் பெறுவது அவசியமானது. சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் குறைவான பிரீமியம் எனக் கூறி குறைவான ஐடிவி மதிப்பை வழங்குகிறார்கள். அது அபாயகரமானது. உங்கள் இருசக்கர வாகனம் திருடுபோனாலோ சேதமடைந்தாலோ, நீங்கள் குறைவான இழப்பீட்டையே பெறுவீர்கள். ஏனெனில், உங்கள் பிரீமியமும் ஐடிவி மதிப்பும் நேர்மறையானது. பிரீமியம் குறையும்போது ஐடிவி மதிப்பும் குறையும். அதிர்ஷ்டவசமாக,டிஜிடில் நாங்கள் உங்கள் வாகனத்திற்குச் சரியான ஐடிவியை நீங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி அளிக்கிறோம். இதனால், எவ்வளவு தொகை எதிர்பார்க்க வேண்டும் என்பதை நீங்களே அறிவீர்கள்
உங்கள் ஐடிவி பற்றி நீங்கள் ஏன் இவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும்?
உங்கள் இருசக்கர வாகனம் திருடப்பட்டுவிட்டது. அது மீண்டும் கிடைக்கும் வாய்ப்பில்லை. அல்லது அது ஒரு விபத்தில் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது என்றால்,முழுவதும் சேதமடைந்துவிட்டது. இந்த இரு சந்தர்ப்பங்களிலும், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியில் குறிப்பிடப்பட்ட ஐடிவி தொகை முழுவதும் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் உங்களுக்குக் கிடைக்கும்!
இருசக்கர வாகன இன்சூரன்ஸில் ஐடிவியின் முக்கியத்தும் என்ன?
உங்கள் ஐடிவி மதிப்பு என்பது உங்கள் பைக் இன்சூரன்ஸில் முக்கியமானது. ஏனெனில், இது உங்கள் இருசக்கர வாகனத்தின் மதிப்பை மட்டுமல்லாது நீங்கள் செலுத்தும் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் தொகையையும் தீர்மானிக்கிறது.
இதுவே உங்கள் பைக்கிற்கான சரியான மதிப்பு - இது உங்கள் இருசக்கர வாகனத்தின் தயாரிப்பு, மாடல், பயன்படுத்தப்பட்ட காலம், கன அளவு, பயன்படுத்தப்படும் நகரம் போன்ற பல அம்சங்களில் அடிப்படையில் உங்கள் இருசக்கர வாகனத்தின் ஐடிவி மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதனால் சரியான ஐடிவியைக் குறிப்பிடுவது இதில் முக்கியமான விஷயம். அதன் அடிப்படையில் உங்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து இழப்பீடு கிடைக்கும்.
உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் இதைப் பொறுத்தது - உங்கள் இருசக்கர வாகன இன்சூரன்ஸ் பிரீமியம், உங்கள் பாலிசி வகை, வாகனம் பயன்படுத்தப்படும் நகரம், இருசக்கர வாகன என்ஜினின் சிசி, இருசக்கர வாகனத் தயாரிப்பு, மாடல், இதற்கு முன்பு இன்சூரன்ஸ் இழப்பீடுபெற்ற வரலாறு (Claiming History), மிக முக்கியமாக உங்கள் ஐடிவி ஆகியவற்றின் அடிப்படையில் பிரீமியம் கணக்கிடப்படுகிறது.
உங்கள் கிளைம் தொகையும் இதை பொறுத்ததே - உங்கள் இருசக்கர வாகன சேதமடைந்தாலோ திருடப்படாலோ நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச தொகை உங்கள் ஐடிவி-யாக இருக்கும். அதனால் பிரீமியம் குறைவாக இருக்கிறது என நீங்கள் ஐடிவியைக் குறைப்பது சரியாக இருக்காது. இதனால் உங்களுக்கு குறைவான தொகையே கிடைக்கும். அது நீங்கள் இழந்த உங்கள் இருசக்கர வாகனத்தின் மதிப்புக்கு ஈடாக இருக்காது.